“சபாநாயகர் சட்டத்தின் காவலரா, மதத்தின் பிரதிநிதியா?”: நயினார் நாகேந்திரன் கேள்வி
‘கருக்கலைப்பு ஒரு கொலை’ என முழக்கமிடப்பட்ட மத ரீதியான ஊர்வலத்தில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்றது, அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை பாதிக்கும் செயல் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். சபாநாயகர் சட்டத்தின் காவலராக செயல்பட வேண்டுமா அல்லது மதத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், கருக்கலைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பெண்களின் அடிப்படை உரிமைகள், தங்களது உடல் குறித்து முடிவெடுக்கும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ‘கருக்கலைப்பு ஒரு கொலை’ என முழக்கமிடும் மத ரீதியான ஊர்வலத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்றிருப்பது, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கும் நாட்டின் சட்டங்களுக்கும் சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை சபாநாயகர் என்பவர் அரசியலமைப்பைப் பாதுகாப்பதுடன், சட்டத்தின் ஆட்சி முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் இருப்பவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏற்கெனவே சட்டப்பேரவையில் பைபிள் வசனங்களைப் போதித்ததாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்பட்டதாகவும் ஜே.சி.டி. பிரபாகர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டதாக நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது மீண்டும் மத ரீதியான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரிக்கும் வகையில் அவர் செயல்பட்டிருப்பது, சபாநாயகர் வகிக்கும் பதவியின் மாண்பை குறைக்கும் செயல் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா?” என்ற கேள்வியையும் நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ளார். மத அடையாளத்தின் அடிப்படையில் பெண்களின் உரிமைகளுடன் தொடர்புடைய விவகாரங்களில் பிற்போக்குத்தனமான போராட்டங்கள் நடத்தப்படுவது நவீன சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு பதிலாக தனிப்பட்ட மதக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சபாநாயகரின் செயல்பாடுகள் இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் தமிழகத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் சமூகநீதி பாரம்பரியத்துக்கு விடுக்கப்படும் சவாலாகும் என்றும், சமூக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் இத்தகைய செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியவை என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.


