கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் அறிக்கை வெளியிட்ட முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் ரூ.75 ஆயிரம் வரை உள்ள தொகை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழக மக்கள் உயிர் என்றால், விவசாயிகள் தமிழகத்தின் உயிர்நாடி என்றும், விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் ஜாதி, மதம், இனம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் பொதுவாக நடைபெறும் தொழில் விவசாயம் மட்டுமே என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். உலகின் ஒரு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள் மற்றொரு பகுதியில் வாழும் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றன என்றும், விவசாயத் தொழிலுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்படும் நாடுகளில்தான் மக்கள் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு இடையே தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதாகவும், பதவியேற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் முதல்வர் கூறியுள்ளார். அதன்படி, கடந்த மே 25, 2026 அன்று குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனில் ரூ.50 ஆயிரம் வரையிலான தொகையை முழுமையாகத் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விவசாய அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதாகவும், நிதி நெருக்கடியான சூழலிலும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு கடன் தள்ளுபடி வரம்பு உயர்த்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு முழுத் தொகையும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரமும் தள்ளுபடி செய்யும் வகையில் கடந்த ஜூன் 19, 2026 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஜூலை 31, 2026 வரை ரூ.5,267 கோடி விடுவிக்கப்பட்டு 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததாகவும், இதையடுத்து ஆகஸ்ட் 7, 2026 அன்று விவசாய சங்க பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் விரிவாக பரிசீலிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டபோது, அரசு கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை 4 முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்டு வந்ததாகவும் முதல்வர் விளக்கமளித்துள்ளார். 2021-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடிக்கான தொகை, 2021 முதல் 2026 வரையிலான காலத்தில் 12 தவணைகளாக கூட்டுறவு வங்கிகளுக்கு அரசால் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தற்போதைய அரசுக்கு இதுபோன்ற நீண்ட கால அவகாசம் இல்லை என்றும், இந்திய ரிசர்வ் வங்கியின் 2025 நவம்பர் 28-ம் தேதியிட்ட வழிகாட்டுதலின்படி, அரசின் கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான முழுத் தொகையையும் 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த விதிமுறைகள் மற்றும் தமிழக அரசின் நிதிநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
புதிய அறிவிப்பின்படி, கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன்கள் 100 சதவீதம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல், ரூ.1 லட்சத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த கூடுதல் தள்ளுபடி திட்டத்தின் மூலம் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகள் தலா ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி பெற உள்ளனர். இதன் மூலம் ஏற்கெனவே பெற்ற தள்ளுபடித் தொகைக்கு மேலாக அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் தமிழக அரசுக்கு சுமார் ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இருப்பினும், தமிழக விவசாயிகளின் நலனில்தான் அரசின் நலனும் அடங்கியுள்ளது என்ற அடிப்படையில், சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.6,220 கோடி அளவிலான பயிர்க்கடன் தள்ளுபடியை அரசு வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.



