அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ள சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்துவது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுகாதாரத் துறைக்கு தமிழக முதல்வர் அதிக முக்கியத்துவம் வழங்குவார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் சுகாதாரத் துறையின் சாதனைகள் குறித்து பெருமையாக பேசுவதும், பாராட்டு தெரிவிப்பதும் மட்டுமே வழக்கமாக இருந்ததாகவும், அதே நேரத்தில் சுகாதாரத் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கடந்த திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்களின் நலனுக்காக குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள முதல்வர் விஜய், சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாநிலத்தில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் அனைத்து சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவத் துறைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையான தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணியிடங்களை இருமடங்காக அதிகரிக்க வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டால் தமிழகத்தில் மிகப்பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்றும் அரசு மருத்துவர்கள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யா, அரசு வேலை கோரி கடந்த 5 ஆண்டுகளாக காத்திருந்தும் உரிய கருணை காட்டப்படவில்லை எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலை வழங்குவது உள்ளிட்ட அவரது அனைத்து கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகளையும் இன்று நடைபெறும் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில் வெளியிட வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.



