தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்: அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர் விஜய் நன்றி
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றியதற்கு தமிழக முதல்வர் விஜய் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். தமிழ்மொழியின் பெருமை மற்றும் தமிழர்களின் உணர்வுகளைப் போற்றும் வகையில் இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல என்றும், அது சிந்தனை, பண்பாடு மற்றும் நாகரிகத்தை உள்ளடக்கியது என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் நம் உயிராகவும், உணர்வாகவும் இருப்பதை தமிழக அரசு முழுமையாக உணர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை மற்றும் சிறப்பை பாதுகாப்பதுடன், தமிழர்களின் உணர்வுகளுக்கும் உரிய மரியாதை அளிக்கும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் அமைந்துள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய்க்கு செலுத்தப்படும் உயரிய மரியாதையாக இந்தத் தீர்மானம் விளங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் முக்கியமான நாளாக நிலைத்திருக்கும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்ததற்காக தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் தமிழ்த்தாயின் புகழ் தொடர்ந்து உயர வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும் தனது எக்ஸ் பதிவில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.



