நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பு
நெல் மற்றும் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சேர்த்து சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750-ம், பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600-ம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், விவசாயிகள் நெல் மற்றும் கரும்பு பயிரிடுவது முதல் அறுவடை செய்து விற்பனை செய்வது வரை தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டு உழைத்து வருவதாக குறிப்பிட்டார். தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை சவாலானதாக இருந்தாலும், நெல் மற்றும் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கில் மாநில அரசின் ஊக்கத்தொகையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் மாநில அரசின் ஊக்கத்தொகை சன்ன ரக நெல்லுக்கு ரூ.289-ம், பொது ரக நெல்லுக்கு ரூ.159-ம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் கூறினார். இதன்படி, சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750-ம், பொது ரக நெல்லுக்கு ரூ.2,600-ம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெல்லுக்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை ஒரே ஆண்டில் ரூ.156-க்கும் அதிகமாக உயர்த்தி வழங்குவது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார். இந்த நடவடிக்கை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரும்பு விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை உயர்வு
கரும்பு விவசாயிகளுக்காக மத்திய அரசு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,290.50 விலையை நிர்ணயித்துள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார். இதனுடன் தமிழக அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகையாக ஒரு டன்னுக்கு ரூ.709.50 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு மொத்தமாக ரூ.4,000 கிடைக்கும். ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ரூ.134-க்கும் அதிகமாக சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படுவது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.



