“தவறான முடிவுகளால் அதிமுக தொடர் தோல்வி” – பழனிசாமிக்கு நத்தம் விஸ்வநாதன், வேலுமணி கடிதம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மீண்டும் கட்சிப் பொறுப்புகளை வழங்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் வகையில், முன்பு பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு தொடர்ந்து கட்சிப் பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அவர்களது பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியை வழிநடத்துவதில் பொதுச்செயலாளர் பழனிசாமி எடுத்த தவறான முடிவுகளும், திமுகவுடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளும் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகளை ஏற்படுத்தியதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 47 அதிமுக எம்எல்ஏக்களில் 25 பேர் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2021 மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல் என மூன்று தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்ததாகவும், ஆனால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட தவறான முடிவுகளால் தொடர் தோல்விகளை சந்திக்க நேரிட்டதாகவும் நத்தம் விஸ்வநாதன், வேலுமணி ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த சோர்வடைந்துள்ளதாகவும், தற்போதைய நிலைமையில் இருந்து கட்சி மீண்டு வர வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் கட்சி தொடர்ந்து பலவீனமடைந்து வரும் நிலையில், கோவை, திருப்பூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கட்சிப் பணியாற்றிய பல்வேறு நிலை நிர்வாகிகள் எந்தவித காரணமும் தெரிவிக்காமல் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்.
கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளரின் கருத்துக்கு மாறாக யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது, செயல்பாடுகளை விமர்சித்து குரல் கொடுக்கக் கூடாது என்ற மனநிலையுடன், கட்சி எந்த நிலைக்குச் சென்றாலும் தாம் கூறுவதை மட்டுமே அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற போக்கில் 400-க்கும் மேற்பட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீக்கங்கள் கட்சி சட்ட திட்டங்களுக்கு முரணானவை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 ஆண்டுகள் 8 மாதங்கள் உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் 6 மாதங்களில் நடைபெற உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் கிளைக் கழக செயலாளர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை பலர் முக்கியப் பொறுப்புகளை ஏற்க உள்ளதால், அதற்கு முன்பாக அதிமுகவை வலுப்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பின்பற்றிய “மறப்போம், மன்னிப்போம்” என்ற அடிப்படையில் கட்சி நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மே 13-ம் தேதிக்குப் பிறகு பல்வேறு நிலைகளில் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டும் தொடர்ந்து கட்சியில் பயணித்து வருபவர்களுக்கு, அவர்கள் முன்பு வகித்த பதவிகளை மீண்டும் வழங்கி அதிமுகவை வலுப்படுத்த பழனிசாமி முன்வர வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளனர்.



