“விஜய் விரைவில் பிரதமராக வருவார் என மக்கள் எதிர்பார்ப்பு” – புதுச்சேரி தவெக எம்எல்ஏக்கள்
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் ஊழலற்ற ஆட்சியை முன்னெடுத்து வருவதாகவும், அவரது ஆட்சியை இந்தியா முழுவதும் மக்கள் விரும்புவதாகவும் புதுச்சேரி தவெக எம்எல்ஏக்கள் சாய் ஜெ. சரவணன்குமார், ராமு ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் காலத்தில் விஜய் பிரதமராக வர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறினர்.
புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இது வரவேற்கத்தக்க சிறப்பான நிகழ்வு என்றும் எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில், அந்த விழாவில் தேசிய கீதம் பாடப்பட்டபோது தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறாதது கண்டிக்கத்தக்கதும், வருத்தமளிப்பதும் என அவர்கள் குறிப்பிட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்திருப்பதைப் போல, புதுச்சேரியிலும் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பாரதியார், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என தமிழின் சிறப்பை எடுத்துரைத்துள்ளதாகவும், பிரதமரும் தமிழை சிறந்த மற்றும் மூத்த மொழியாக குறிப்பிட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே, அனைத்து அரசு விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி, அனைத்து இடங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வைப்போம் என்றும் தவெக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.
மேலும், தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருவதாகவும், இதனை நாடு முழுவதும் மக்கள் விரும்புவதாகவும் அவர்கள் கூறினர். இதன் காரணமாக எதிர்காலத்தில் தமிழக முதல்வர் விஜய் பிரதமராக வருவார் என மக்கள் கருதுவதாகவும் தெரிவித்தனர். அடுத்த தேர்தலில் தவெக தேசிய அளவில் வலுப்பெறும் என்றும், தமிழகத்தில் தவெக–திமுக இடையேதான் முக்கிய போட்டி நிலவும் என்றும் அவர்கள் கூறினர். புதுச்சேரியைப் பொறுத்தவரை ஒரே கட்சியாக தவெக உருவெடுக்கும் என்றும் எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, புதுச்சேரியில் பாஜக மட்டுமின்றி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருப்பவர்களும் தவெகவில் இணையத் தயாராக இருப்பதாகவும், அவர்கள் விரைவில் கட்சியில் இணைவார்கள் என்றும் எம்எல்ஏ ராமு தெரிவித்தார்.



