தவெக எம்எல்ஏ இளையராஜாவை சந்தித்தது ஏன்? ஜாமீனில் வந்த யூடியூபர் திருநாவுக்கரசு விளக்கம்
தவெக எம்எல்ஏ இளையராஜாவை தான் சந்தித்தது உண்மைதான் என்றும், அரசியல் ஆய்வாளர் என்ற முறையில் தரவுகளைச் சேகரிப்பதற்காகவே அவரைத் தொடர்பு கொண்டதாகவும் ஜாமீனில் வெளிவந்த யூடியூபர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
தவெக எம்எல்ஏக்களிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசு, தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் தான் பேசியது உண்மைதான் என்று தெரிவித்தார். அரசியல் ஆய்வாளராக செயல்பட்டு வருவதால், அதற்குத் தேவையான தரவுகளைச் சேகரிக்கும் நோக்கிலேயே அவரை தொடர்பு கொண்டதாகவும் கூறினார். மேலும், தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் திருநாவுக்கரசு தெரிவித்தார். கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை 65-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தலுக்கு முன்பாக தவெக தலைவர் விஜய்யை சந்தித்து சுமார் 1.5 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும் திருநாவுக்கரசு தெரிவித்தார். மேலும், ஜான் ஆரோக்கியசாமி மற்றும் சரண் ரெட்டி ஆகியோருடனும் தேர்தல் தொடர்பாக பேசியதாகவும், இதற்காக தாம் எந்தக் கட்டணமும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மேகாலயா புராஜெக்ட் தொடர்பாகவும், சிங்கப்பூர் மற்றும் பெங்களூருவில் இருந்து ஹவாலா பணம் பெற்றதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படும் தகவல்கள் தவறானவை என்று திருநாவுக்கரசு மறுத்தார். அத்தகைய பணப் பரிவர்த்தனை எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.



