ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க திமுக பாஜக பக்கம் செல்கிறது: அமைச்சர் அருண்ராஜ் விமர்சனம்
ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிப்பதற்காக திமுக பாஜக பக்கம் செல்ல முயற்சிப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், திமுகவின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்தும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஹெல்த் சென்டர் மருத்துவமனையில் செவிலியர்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், மருத்துவமனைகளில் மருத்துவர்களின் திறனுக்கு இணையாக செவிலியர்களின் திறனும் முக்கியமானது என்று தெரிவித்தார்.
மேலும், நீண்ட காலமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதுதொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விரைவில் இதுகுறித்து நல்ல செய்தி வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த காலங்களில் திமுக நடத்திய கூட்டத்தில் தவெக பங்கேற்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மாநில நலன் சார்ந்த விவகாரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும், ஆனால் தற்போது திமுக அந்த விவகாரத்தை புறக்கணிப்பது, அக்கட்சியைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு காரணங்களால் திமுக மத்திய அரசுடன் பணிந்து செல்வதாகவும், திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அமைச்சர் அருண்ராஜ் குற்றம்சாட்டினார். கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியது திமுகவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், எப்போது பாஜக பக்கம் செல்லலாம், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்ற நிலையில் திமுக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், கடந்த 60 ஆண்டுகளில் சென்னையின் வளர்ச்சிக்கான முறையான திட்டமிடல் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். பல்வேறு நீர்நிலைகளில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையின்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.



