தமிழக மக்களின் நலனுக்காக காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவோம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு
தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் செயல்படத் தொடங்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கூட கர்நாடக அரசு மதிப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது சரியான முடிவு என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார். அதேபோல், மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்ட அவர், முக்கியமான மாநில உரிமை சார்ந்த விவகாரத்தில் நடைபெறும் ஆலோசனையில் சில கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தார்.
முதல்வர் விஜய்யின் இரண்டரை மாத கால ஆட்சி, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் ஜி.கே.வாசன் கூறினார். இதனிடையே டெல்லியில் நடைபெற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர்களுடன் தானும் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சி, எதிர்காலத்தில் வளமான தமிழகத்தையும் வலிமையான பாரதத்தையும் உருவாக்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய மேடையாக அமைந்ததாகவும் ஜி.கே.வாசன் குறிப்பிட்டார். மேலும், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் செயல்படத் தொடங்கியுள்ளது என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான அடுத்தகட்ட முடிவு மற்றும் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.



