“கர்நாடக அமைச்சரவையில் நிச்சயம் பெண் அமைச்சர் இடம்பெறுவார்” – டி.கே.சிவக்குமார்
கர்நாடக அமைச்சரவையில் தற்போது பெண் அமைச்சர்கள் யாரும் இடம்பெறாததை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்திருந்த நிலையில், இந்த நிலை நிச்சயம் மாற்றப்படும் என்றும், கர்நாடக அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர் இடம்பெறுவார் என்றும் முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், கர்நாடக அமைச்சரவையில் ஒரு பெண் கூட இல்லாதது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலின்போது பெண்களுக்கு காங்கிரஸ் கட்சி வழங்கிய வாய்ப்புகள் குறித்து செய்தியாளர்களுக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கர்நாடக அமைச்சரவையில் பெண் அமைச்சர் இல்லாத தற்போதைய நிலை நிச்சயமாக மாற்றப்படும் என்றும், காங்கிரஸ் கட்சி குறித்து கிரண் ரிஜிஜு கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் சிவக்குமார் கூறினார். பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை முன்னெடுத்து நிறைவேற்றியதில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறிய சிவக்குமார், கர்நாடக அமைச்சரவையில் நிச்சயம் ஒரு பெண் இடம்பெறுவார் என்றும், பெண்களுக்கு மேலும் அதிக அதிகாரமும் வலிமையும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
பின்னணி: பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இது காங்கிரஸ் கட்சியிடமிருந்து வரும் நேர்மறையான செய்தியாகத் தெரிகிறது என்றும், பெண்கள் தொடர்பான விவகாரத்தில் ராகுல் காந்தியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை காங்கிரஸ் கட்சி இனி நிபந்தனையின்றி ஆதரிக்கும் என நம்புவதாகவும் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, மகளிர் இடஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அது ஏன் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும், அதனை தொகுதி மறுவரையறையுடன் இணைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு, 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகளிர் இடஒதுக்கீட்டை செயல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம் என தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனுடன், கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர்கூட இடம்பெறவில்லை என்றும், இது 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும் கிரண் ரிஜிஜு விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, கர்நாடக அமைச்சரவையில் நிச்சயம் ஒரு பெண் இடம்பெறுவார் என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.



