தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக அரசின் மடைமாற்று அரசியலுக்கு துணை போக மாட்டோம்: அதிமுக
நாடாளுமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யப்படாத தொகுதி மறுவரையறை மசோதாவை காரணமாகக் கொண்டு அவசரமாக எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்துவதாகவும், தமிழக அரசின் இந்த மடைமாற்று அரசியலுக்கு அதிமுக ஒருபோதும் துணை போகாது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பதிவில், தொகுதி மறுவரையறை தொடர்பாக புதிய மசோதா எதுவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், அதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் எதற்காக அவசரமாக எம்.பி.க்கள் கூட்டம் என்ற பெயரில் ஒரு நிகழ்வை நடத்துகிறார் என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், தமிழகத்தின் கண்முன்னே நடைபெற்று வரும் காவிரி – மேகேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது. ஆனால், அந்தக் கோரிக்கைகளை புறக்கணித்துவிட்டு, இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத மசோதாவை முன்வைத்து கூட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதேபோல், இதுவரை மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. விவசாயிகளின் கவலை மற்றும் கண்ணீருக்கு பதில் அளிக்காமல், அரசு மடைமாற்று அரசியலை முன்னெடுத்து வருவதாகவும் அக்கட்சி விமர்சித்துள்ளது.
விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, தாக்கல் செய்யப்படாத தொகுதி மறுவரையறை மசோதாவை முன்வைத்து அரசியல் செய்வதை அதிமுக ஏற்காது என்றும், தமிழக அரசின் இதுபோன்ற மடைமாற்று அரசியலுக்கு தாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோம் என்றும் அதிமுக ஐடி விங் தனது பதிவில் தெரிவித்துள்ளது.



