மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும்: ராகுல் காந்தி
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல், எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பெண்களின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இந்திய பெண்களின் திறமையும் ஆற்றலும் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், கனவு காணவும் போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். பெண்கள் தங்களை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ள முடியாத எந்த நாடும் நிச்சயமாக முன்னேற முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த வீடியோவை தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து தெரிவித்துள்ளார். பெண்கள் தொடர்பான விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாட்டில் தெளிவான மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இது காங்கிரஸ் கட்சியிடமிருந்து வரும் நேர்மறையான செய்தியாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை எந்த நிபந்தனையும் இன்றி ஆதரிக்கும் என நம்புவதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா 2023, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஏற்கெனவே ஒருமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருக்கும் கிரண் ரிஜிஜுவுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளார்.
மேலும், மசோதா நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அது இன்னும் ஏன் அமல்படுத்தப்படவில்லை என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது மகளிர் இட ஒதுக்கீட்டை தேவையற்ற வகையில் தொகுதி மறுவரையறையுடன் இணைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.



