குறுவை சாகுபடியில் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: இபிஎஸ் கோரிக்கை
குறுவை சாகுபடியில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் மூலம் கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய எடப்பாடி பழனிசாமி, காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் தண்ணீர் இல்லாமல் குறுவை பயிர்கள் காய்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த காலங்களில் அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி, சட்ட வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று நடவடிக்கை எடுப்பது நடைமுறையாக இருந்ததாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், சட்ட ரீதியாக போராடியும் காவிரி நீரை பெற வேண்டிய நிலை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் போதுமான அளவு நீர் இருந்தபோதிலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு 3,500 கனஅடி தண்ணீரை திறக்கவில்லை என்றும், அந்த தண்ணீர் கிடைத்திருந்தால் விவசாயிகள் குறுவை சாகுபடியை முழுமையாக மேற்கொண்டிருப்பார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். தற்போது கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு ஆழ்துளை கிணறு பாசனத்தை நம்பி சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஒரு லட்சம் ஏக்கர் அளவிலான பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகளை நேரில் அனுப்பி பயிர் சேதங்களை கணக்கிட்டு, விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.



