பெரம்பூர் தேர்தல் வெற்றி வழக்கு: முதல்வர் விஜய்க்குப் புதிதாக நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் ஆணை
சென்னை பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், தமிழக முதல்வர் விஜய்க்குப் புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 1,20,365 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை விட 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனுவில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்திருப்பதாகவும், சொத்து விவரங்கள் மற்றும் வழக்குகள் குறித்த விவரங்களைச் சரியாகத் தெரிவிக்காததால் விஜய்யின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் சென்று சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.



