டெல்லியில் இளைஞர்கள் மீதான காவல் துறை ஒடுக்குமுறை ஏற்றுக்கொள்ள முடியாது: உதயநிதி
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டிருந்த சிஜேபி அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறை ஒடுக்குமுறை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய அடாவடித்தனமும், டெல்லியிலிருந்து வரும் காட்சிகளும் அதிர்ச்சியளிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அரசு தன் காவல்துறையைக் கொண்டு ஒடுக்குமுறையைக் கையாள்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இன்று நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகர் உட்பட இந்தியா முழுவதும் எதிரொலிப்பதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாகச் செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியைப் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவுவாயில்கள் மூடப்பட்டு இணையச் சேவையும் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



