தவெக எம்எல்ஏ குதிரை பேர விவகாரம்: மேலும் ஒருவர் கைது; நிதி நிறுவனங்களுக்குச் சீல்
ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீஸார் கடந்த ஜூன் 29-ம் தேதி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு இதில் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இருவரும் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். இவ்வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.2.82 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கின் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் கரூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள நிதி நிறுவனங்களில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். வழக்கை விசாரிக்கும் அதிகாரியின் உத்தரவின்பேரில் கரூரைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்குச் சொந்தமான நிதி நிறுவனத்தில் லாலாபேட்டை போலீஸாரும், கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பந்தநல்லூர் போலீஸாரும் இச்சோதனையை மேற்கொண்டனர்.
இச்சோதனையின் போது நிதி நிறுவனங்களின் வரவு-செலவு கணக்குகள், இருப்புப் பதிவேடுகள், கணினிகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவற்றை தீவிரமாக ஆய்வு செய்த அதிகாரிகள், சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். விசாரணையின் முடிவில் முறைகேடான பணப்பரிமாற்றம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிதி நிறுவனங்களுக்குப் போலீஸார் சீல் வைத்தனர்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் மதுரையைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவரைப் பிடித்துத் திருவல்லிக்கேணி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.56 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்பதால் காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.



