காமராஜர் ஆட்சியைப் போல முதல்வர் விஜய்யின் ஆட்சி நேர்மையாக இருக்க வேண்டும்: ப.சிதம்பரம் பேச்சு
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ‘லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியைப் போன்ற நேர்மையான நிர்வாகத்தை தவெக அரசு வழங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். விழாவில் பேசிய ப.சிதம்பரம், தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி புரிந்த 9 ஆண்டு காலத்தில் லஞ்சம் என்ற சொல்லுக்கே இடமில்லாமல் இருந்தது என்று அவரது நேர்மையான அரசியல் வரலாற்றை நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் விஜய்யின் தவெக ஆட்சியில் லஞ்சத்தைத் தவிர்க்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாகப் பத்திரப்பதிவு அலுவலகங்கள், ஆசிரியர் பணி நியமனம் மற்றும் இடமாறுதல் உள்ளிட்டவற்றில் லஞ்சம் பெறப்படுவதில்லை என்றும், இதேபோல் இன்னும் பல துறைகளிலும் லஞ்சம் முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
லஞ்சம் இல்லாத காமராஜரின் ஆட்சி நிர்வாகத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு முதல்வர் விஜய் வழங்க வேண்டும் எனப் ப.சிதம்பரம் வலியுறுத்தினார். அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், காமராஜர் மாடல் அரசை யாராலும் கொண்டு வர முடியாத சூழலில், தற்போது முதல்வர் விஜய் அதைத் தொடங்கி நேர்மையான ஆட்சியை வழங்க முயற்சித்து வருவதாகப் பாராட்டினார்.



