நீட் தேர்வுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் தலைமையில் போராட்டம்: அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் கல்வி முறையில் நிலவும் சுரண்டல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதுடன், தனியார் பயிற்சி மையங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வணிகமாக மாறியுள்ளது என்றும் அவர் சாடினார்.
கடந்த 2016-ல் ரூ.18,000 ஆக இருந்த பயிற்சி கட்டணம் தற்போது ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மன உளைச்சல் காரணமாகத் தமிழகத்தில் இதுவரை 37 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது வேதனையளிப்பதாகத் தெரிவித்தார். ஒருபுறம் தகுதி என்று கூறிவிட்டு, மறுபுறம் மருத்துவ மேல்படிப்புக்குப் பூஜ்ஜியம் எடுத்தால் போதும் எனத் தளர்த்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
கல்வி என்பது குறிப்பிட்ட வர்க்கத்துக்கு மட்டுமேயானதாக இருக்கக் கூடாது என்றும், கிராமம் – நகரம் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வரும் நாட்களில் நீட் தேர்வுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் கல்வித் துறையில் நிலவும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறினார்.



