“எப்சிஆர்ஏ திருத்த மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கும்”: கார்கே அறிவிப்பு
வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மேலும், இந்த மசோதாவை எதிர்த்து மேற்கொள்ள வேண்டிய நாடாளுமன்ற வியூகம் குறித்து எதிர்க்கட்சிகளுடன் நாளை ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு நிதி நடைமுறைகளை மேலும் கடுமையாக்கும் நோக்கில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் உள்ள தனிநபர்கள், சங்கங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவது மற்றும் அந்த நிதியை பயன்படுத்துவது தொடர்பான விதிகளை ஒழுங்குபடுத்தும் 2010-ம் ஆண்டு வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள அரசு முன்மொழிந்துள்ளது.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எப்சிஆர்ஏ தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை காங்கிரஸ் எதிர்க்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கார்கே தெரிவித்தார். மசோதாவை எவ்வாறு எதிர்ப்பது என்பது குறித்து நாளை எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்தி முடிவு செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அயோத்தி ராமர் கோயில் தொடர்பான நன்கொடை முறைகேடு குறித்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் முதலில் எழுப்பியது காங்கிரஸ் கட்சிதான் என்றும் கார்கே தெரிவித்தார். ராமர் கோயில் அறங்காவலர் குழுவை அமைத்தது யார், கோயில் பணிகளை தொடங்கியது யார், கோயிலில் கொடியை ஏற்றியது யார், அறங்காவலர் குழு உறுப்பினர்களை தேர்வு செய்தது யார் என்ற கேள்விகளையும் அவர் எழுப்பினார்.
இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இருந்ததாக கார்கே குற்றம்சாட்டினார். எனவே, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



