விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசை கண்டித்து ஆக.14-ல் அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது, மேகேதாட்டு அணை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து தமிழக அரசைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தவெக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் குறு மற்றும் சிறு விவசாயிகள் ரூ.75 ஆயிரம் வரை பெற்ற பயிர்க்கடன் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகளை வகைப்படுத்தி ஒரு பகுதி கடனை மட்டும் தள்ளுபடி செய்யும் இந்த நடவடிக்கை, தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் பழனிசாமி கூறியுள்ளார்.
இதனிடையே, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும், இதனால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை முறையாகப் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என ஏற்கெனவே வலியுறுத்தியிருந்ததாகவும், ஆனால் பட்ஜெட்டில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வது தொடர்பான அறிவிப்பு இடம்பெறவில்லை என்றும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனால், விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சிப்பதாகக் கூறியும், மேகேதாட்டு விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதாகக் கூறியும், காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனக் கண்டித்தும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு பழனிசாமி நேரடியாக தலைமை வகிக்க உள்ளார்.
மேலும், சென்னை மாவட்டத்தைத் தவிர மற்ற வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள போராட்டங்களுக்கு தலைமை வகிக்க இருப்பவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.



