தமிழக வேளாண் பட்ஜெட்டில் ‘உழவர் ஏஐ திட்டம்’: ரூ.2 கோடியில் நவீன டிஜிட்டல் சேவைகள் அறிமுகம்
தமிழகத்தின் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில், விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்ப பயன்பாட்டை விரிவுபடுத்தும் வகையில் ‘உழவர் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாநில நிதியிலிருந்து ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் துல்லியமான தகவல்கள் கிடைப்பது, சரியான நேரத்தில் பெய்யும் மழைக்கு இணையான பயனை அளிக்கும் என்ற நோக்கில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரவழி கற்றல் (Machine Learning) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மண் வளம், வானிலை முன்னறிவிப்பு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, பருவநிலைக்கு ஏற்ற பயிர் தேர்வு உள்ளிட்ட தகவல்கள் விதைப்பு முதல் அறுவடை வரை நேரடியாக வழங்கப்படும்.
மேலும், சந்தை நிலவரம், குரல் வழி வேளாண் சேவைகள் (Voice-First Agriculture Services) மற்றும் பல்வேறு அறிவுசார் வேளாண் ஆலோசனைகள் அனைத்தையும் விவசாயிகள் தங்களது கைப்பேசி மூலம் எளிதாக பெறும் வசதியும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் தொழில்நுட்ப உதவியுடன் விவசாய முடிவுகளை விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்க விவசாயிகளுக்கு வழிவகை செய்யப்படும்.
இதனுடன், பயறு வகைகள் மற்றும் உணவு எண்ணெய் வித்துகளில் தன்னிறைவை எட்டும் நோக்கில் ரூ.203.64 கோடி மதிப்பில் புதிய இயக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயறுவகைகளுக்காக ரூ.65.28 கோடியும், எண்ணெய் வித்துப் பயிர்களுக்காக ரூ.138.36 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் உளுந்து, துவரை, பச்சைப்பயறு, காராமணி உள்ளிட்ட பயறுவகைகளின் சாகுபடிப் பரப்பை 15.19 லட்சம் ஏக்கரில் இருந்து 24.70 லட்சம் ஏக்கராக உயர்த்தவும், உற்பத்தியை 3.88 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 7.72 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு உள்ளிட்ட எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடிப் பரப்பை 9.26 லட்சம் ஏக்கரில் இருந்து 14.89 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தவும், உற்பத்தியை 8.77 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 16.14 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்பமும் நவீன வேளாண் நடைமுறைகளும் இணையும் இந்த முயற்சிகள், தமிழக விவசாயத்தின் உற்பத்தித் திறன் மற்றும் வருமானத்தை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



