“தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை” – ராகுல் காந்தி திட்டவட்டம்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்யப்படும் வரை எவ்விதப் பேச்சுவார்த்தையிலோ அல்லது விவாதத்திலோ எதிர்க்கட்சிகள் பங்கேற்காது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்துப் பேச நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு எனது பெயரைக் குறிப்பிட்டு அழைப்பு விடுத்தார். நாடாளுமன்ற மரபுப்படி ஒருவரின் பெயர் குறிப்பிடப்படும் போது அவருக்குப் பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், ஆனால் நான் பேச முயன்றபோது எனது மைக் அணைக்கப்பட்டு வாய்ப்பு மறுக்கப்பட்டது” எனக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களின் 3 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்:
- கல்வி முறையில் தோல்வியடைந்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
- அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு, தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை அரசுடன் எவ்விதப் பேச்சுவார்த்தையும் இல்லை என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.
முன்னதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தியை நேரில் சந்தித்து அவை சுமுகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், மக்களவை மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், ஜெகதாம்பிகா பால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.



