வேலையில்லா பட்டதாரிகளின் உதவித்தொகை ரூ.4 ஆயிரமாக உயர வாய்ப்பு; அமைச்சர் முகமது பர்வேஸ்!
புதுக்கோட்டையில் நேற்று அரசுத் துறைகள் சார்பில் 721 பயாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம்.அருணா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முகமது பர்வேஸ், தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். “தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் உரிய காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்; அதனடிப்படையில் இந்த உதவித்தொகை உயர்வுக்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்நாட்டில் தங்கியுள்ள பிற மாநிலத் தொழிலாளர்களின் முழுமையான விவரங்கள் அரசிடம் உள்ளதாகவும், மாவட்டங்கள் தோறும் அதிகாரிகள் இதுகுறித்த தொடர் கணக்கெடுப்புகளை நடத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் தவெக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
இவற்றுடன், தேயிலைத் தோட்ட நல வாரியத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்குவது குறித்தும் துறை சார்ந்த அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ் தனது பேட்டியில் விவரித்தார்.



