ஜூலை 18 தமிழ்நாடு நாள் மற்றும் நவம்பர் 1 ஆகிய இரு நாட்களையும் தவெக அரசு கொண்டாடும்: விஜய்!
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, ‘சென்னை மாகாணம்’ என்ற பெயரில் இருந்த மாநிலத்தை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாகப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாக, 1967-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா, ஜூலை 18-ம் தேதியன்று தமிழக சட்டப்பேரவையில் சென்னை மாகாணத்தை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்த வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் நேற்று ‘தமிழ்நாடு நாள்’ மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி தவெக தலைவரும், முதல்வருமான விஜய் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ம் நாளையும், ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்ட அண்ணாவால் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ம் நாளையும் தவெக அரசு அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடும் என அறிவித்துள்ளார். சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும் சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும் தொழில்நுட்பத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம் என்றும், தமிழ்நாடு உருவாக உழைத்த தியாகச் சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்குவோம் என்றும் முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியை ‘தமிழ்நாடு நாள்’ என்று அப்போதைய அதிமுக அரசு கொண்டாடி வந்தது. ஆனால், நவம்பர் 1-ம் தேதி மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள் பிரிந்து சென்ற நாள் என்பதால், அந்த நாளை மாநில உருவாக்க நாளாகக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்ற கோரிக்கை எழுந்தது. இதன் காரணமாக, 2022-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என முறைப்படி அறிவிக்கப்பட்டுத் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தத் தமிழ்நாடு நாளில் வாழ்த்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 1956-ம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரிலேயே தொடர்ந்தது என்றும், 1967-ல் அண்ணா முதல்வரானதும் தமிழ்த்தாயின் ஏக்கம் தீர ‘தமிழ்நாடு’ என்ற பெயரினை அவையினில் முழங்கி நிறைவேற்றிய நாளே இந்தத் தமிழ்நாடு நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்தில், தமிழர்கள் வாழும் பகுதிக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற தியாகிகளின் விருப்பத்தை ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் திமுக நிறைவேற்றிக் காட்டியதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியம் என்றென்றும் செழித்தோங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.



