“தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்” – முதல்வர் விஜய் ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து!
‘தமிழ்நாடு நாள்’ திருநாளை முன்னிட்டு, “சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்” என்று தமிழக முதல்வர் விஜய் மாநில மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் செய்தியையும் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் விஜய் விடுத்துள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது பெருமைமிகு மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், அதேபோல ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்து வெற்றிகரமாக நிறைவேற்றிய ஜூலை 18-ஆம் நாளையும் (இன்று) இந்த அரசு உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தியாக சீலர்களுக்கு வீரவணக்கம்:
கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் நம் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றிட நாம் அனைவரும் இந்நாளில் ஒன்றிணைந்து உறுதியேற்போம்! தமிழின் இனிமையும், தமிழரின் உயரிய பண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் உலகெங்கும் தழைத்தோங்கட்டும். இன்றைய இந்த உன்னத நாளில், நமது தமிழ்நாடு தனி மாநிலமாக உருவாவதற்கும், அதற்குப் பெயர் சூட்டப்படுவதற்கும் தங்களது வாழ்வை அர்ப்பணித்து உழைத்திட்ட தியாக சீலர்களை நன்றியோடு நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்!” என்று முதல்வர் விஜய் தனது பதிவில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.



