சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதியில் திடீர் ஆய்வு: மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார் முதல்வர் விஜய்!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் தமிழக முதல்வர் விஜய் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் தனது அன்றாடப் பணிகளை முடித்துவிட்டுத் திட்டமிடப்படாத இந்த ஆய்வை மேற்கொண்ட முதல்வர், அங்கு தங்கியுள்ள மாணவர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து நேரடியாகக் கேட்டறிந்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக 10 தளங்கள், லிஃப்ட் வசதி உள்ளிட்ட நவீனக் கட்டமைப்புகளுடன் சுமார் ரூ.44 கோடி செலவில் இந்த விடுதி கட்டி முடிக்கப்பட்டது. இங்கு தங்கிப் பல்வேறு கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்த முதல்வர், அவர்களின் தங்குமிடம், உணவு மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டார்.
கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை:
இந்த ஆய்வின் போது, விடுதி மாணவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் வசதிகள் மற்றும் கல்விச் சார்ந்த சில கோரிக்கைகளை முதல்வரிடம் விரிவாக எடுத்துரைத்தனர். மாணவர்களின் அனைத்துப் புகார்களையும், தேவைகளையும் பொறுமையுடன் கேட்டறிந்த முதல்வர் விஜய், அவற்றின் மீது போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்தத் திடீர் ஆய்வின் போது, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலரும் முதல்வருடன் உடனிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையிலும் முதல்வர் விஜய் இதேபோன்று திடீர் ஆய்வு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



