“சென்னை எல்லைச் சாலை பணிகள் ஓராண்டிற்குள் நிறைவடையும்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி ஆய்வு!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எண்ணூர் துறைமுகத்திலிருந்து இயக்கப்படும் கனரக வாகனங்கள் எளிதாகச் சென்று வரவும் தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ‘சென்னை எல்லைச் சாலை’ (Chennai Peripheral Ring Road) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரை 132.87 கி.மீ. தூரத்திற்கு 5 கட்டங்களாக நடைபெற்று வரும் இப்பணிகளில், முதற்கட்டமாக எண்ணூர் முதல் பஞ்செட்டி வரை நடைபெற்று வரும் சாலைப் பணிகளைப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது: “தற்போது திருச்சியிலிருந்து 3 மணி நேரத்தில் செங்கல்பட்டை அடைந்துவிட்டாலும், அங்கிருந்து பல்லாவரம் வந்து சேர போக்குவரத்து நெரிசல் காரணமாக மேலும் 4 மணி நேரம் ஆகிறது. கடந்த 40 ஆண்டுகளாகப் போக்குவரத்தைச் சீரமைக்க முறையான திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை. எனவே, சென்னைக்குள் வருவதற்கும், சென்னையிலிருந்து வெளியேறுவதற்கும் தனித்தனியே புதிய திட்டங்களை வகுத்து வருகிறோம்.
தற்போது எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரையிலான சென்னை எல்லைச் சாலைத் திட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகள் குறித்து இந்த ஆய்வில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இன்னும் ஓராண்டிற்குள் இந்த ஒட்டுமொத்த சாலைப் பணிகளும் முழுமையாக நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும், சென்னையில் உள்ள பெரும்பாலான முக்கியச் சாலைகள் உலகத் தரத்திலான 6 வழிச் சாலைகளாக மாற்றியமைக்கப்படும், இதன் மூலம் நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்” என்று அவர் தெரிவித்தார்.



