சேலையூர் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
சேலையூர் அருகேயுள்ள குடிசைப் பகுதியில் வசித்து வரும் மோகன் ராஜ் (29), கணவரை பிரிந்து வாழும் பெண்ணுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் மகள் இருந்த நிலையில், மாணவிக்கு மோகன் ராஜ் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து, பள்ளிக்குச் சென்ற மாணவி அங்கு ஆசிரியரிடம் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து தெரிவித்தார்.
மாணவி தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஆசிரியர் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து சிட்லபாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மோகன் ராஜ் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



