இந்திய வளர்ச்சியின் முதுகெலும்பு இளைஞர்கள்; கல்வி, சம வாய்ப்பே முன்னேற்றத்தின் அடித்தளம் – பிரதமர் மோடி
உலகளவில் அதிவேகமாக வளர்ச்சி அடையும் முதன்மைப் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருப்பதற்கு நாட்டின் இளைஞர் சக்தியே முக்கிய காரணமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘விவேக ஸ்மாரகா’ பண்பாட்டு மையத்தை திறந்து வைத்து உரையாற்றிய அவர், நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை பெருமையுடன் எடுத்துரைத்தார்.
உரையின்போது, சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, நாட்டின் முன்னேற்றத்திற்கு தரமான கல்வியும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் இன்றியமையாதவை என்றார். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் எந்தவித பாகுபாடும் இல்லாத சூழலை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும், பெண்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்வது முதல் தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி கற்கும் வாய்ப்புகள் வரை பல்வேறு மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், புதிய தேசிய கல்விக் கொள்கை 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களை உருவாக்கும் முக்கிய கருவியாக செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளில் 650-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 823 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 1.40 லட்சம் எம்பிபிஎஸ் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி உள்கட்டமைப்பு கணிசமாக விரிவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதோடு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளித் துறைகளில் இந்திய இளைஞர்கள் சாதனை படைத்து வருவதாகவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். குறிப்பாக, விக்ரம்-1 ஏவுகணையை உருவாக்கிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் போன்ற நிறுவனங்கள் இந்திய இளைஞர்களின் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் பாராட்டினார்.
விளையாட்டுத் துறையிலும் ‘கேலோ இந்தியா’ போன்ற திட்டங்கள் மூலம் கிராமப்புறங்களில் உள்ள திறமைகள் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். ‘ஜன சேவை – ஜனார்த்தன சேவை’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில், நாட்டின் நலனை முன்னிறுத்தி இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்றும், சரியான வழிகாட்டுதலும் போதுமான வாய்ப்புகளும் வழங்கப்படும் போது இளைஞர்களின் திறமையே இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான மிகப்பெரிய பலமாக மாறும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.



