பிரதமரிடம் வீடியோ மூலம் மன்னிப்பு கேட்ட 15 வயது சிறுமி: “தவறாக பேசிவிட்டேன், என்னை மன்னியுங்கள்”
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான முழக்கங்களை எழுப்பியதாக கூறப்படும் 15 வயது சிறுமி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கோரியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், நண்பர்களுடன் கன்னாட் பிளேஸ் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டபோது, தன்னைச் சுற்றியிருந்தவர்களின் தாக்கத்தால் பிரதமருக்கு எதிராக தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக சிறுமி தெரிவித்துள்ளார். மேலும், “எனக்கு 15 வயதுதான். நான் செய்தது மன்னிக்க முடியாத தவறு. இது எனது முதல் மற்றும் கடைசி தவறு. நாட்டின் அனைத்து மக்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். என் செயலுக்காக மிகவும் வெட்கப்படுகிறேன். தயவுசெய்து என்னை மன்னியுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக, ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தன்னையும் தனது மறைந்த தாயாரையும் தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசிய இளைஞர்களை மன்னிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார். இளமையில் தவறுகள் நிகழலாம் என்றும், அவர்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
மேலும், வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அலைக்கழிப்பதோ அல்லது சமூகத்தில் இருந்து அவர்களை ஒதுக்குவதோ தீர்வாகாது என்றும், வழிதவறிய இளைஞர்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்வதே சமூகத்தின் கடமை என்றும் பிரதமர் தனது கருத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது பூஜ்ஜிய எஃப்ஐஆர் (Zero FIR) பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக டெல்லி காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் மன்னிப்பு வீடியோவும், பிரதமரின் கருத்தும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.



