வினாத்தாள் கசிவு கும்பல்கள் தப்ப முடியாது; கடும் நடவடிக்கை உறுதி – செல்ஃபி வீடியோவில் பிரதமர் மோடி எச்சரிக்கை
வினாத்தாள் கசிவில் ஈடுபடும் கும்பல்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். தேர்வு முறையில் சீர்திருத்தங்களை வலுப்படுத்தும் புதிய வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட செல்ஃபி வீடியோவில் அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய பிரதமர் மோடி, கடந்த பல தசாப்தங்களாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வினாத்தாள் கசிவு என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வந்ததாக குறிப்பிட்டார். இதனால் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையை மாற்றும் நோக்கில் தேர்வு முறையில் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மாநில அரசுகளின் ஆலோசனைகளையும் இணைத்து வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான தேர்வு முறையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
மாணவர்களின் உழைப்பையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் வகையில் செயல்படும் வினாத்தாள் கசிவு கும்பல்களுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படாது என்று பிரதமர் வலியுறுத்தினார். சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின் கீழ், வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் வகையில் சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, அமைப்புசார்ந்த முறையில் செயல்படும் வினாத்தாள் கசிவு கும்பல்களுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கவும், இவ்வகை வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைத்து இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம், தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் மாணவர்களின் நலனை உறுதி செய்யும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.



