10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்தும் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை: ராகுல் சாடல்
“கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை தேர்வு வினாத்தாள்கள் கசிந்தும், அதில் ஒருவருக்குக் கூட இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகச் சிறந்த கல்வி அமைப்புகளில் ஒன்றாக அறியப்பட்ட நமது கல்வி அமைப்பு, இன்று முறைகேடுகள் நிறைந்த அமைப்பாக மாறி லட்சக்கணக்கான மாணவர்களைப் பாதித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
வினாத்தாள் கசிவால் ஏழரை கோடி மாணவர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் வாழ்க்கையைச் சீரழிப்பவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், நீட் தேர்வு எழுதும் குடும்பங்கள் செலவிடும் தொகையானது, அரசின் ஆண்டு கல்வி பட்ஜெட்டுக்கு நிகராக உள்ளது என்றும் இதற்காகப் போராடும் மாணவர்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவுகிறது என்றும் தெரிவித்தார்.



