டெல்லியில் பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
நேற்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைவர்கள் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு ஒப்புக் கொண்டும் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி ராகுல் காந்தி போராட்டத்தைத் தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முன்அனுமதியின்றி பிரதமர் இல்லம் முன்பாகப் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்டோர் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர்.



