புதுச்சேரி நல்லவாட்டில் நகை திருட்டு வழக்கில் மீன் வியாபாரி கைது: 30 பவுன், ரூ.1 லட்சம் மீட்பு
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே நல்லவாடு மீனவ கிராமத்தில் வீட்டில் நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லவாடு தெற்கு தெருவைச் சேர்ந்த விஜயேந்திரன் (41), மும்பையில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி முகுந்தவதி (31), குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் கோயில் திருவிழாவுக்காக வெளியே சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து முகுந்தவதி அளித்த புகாரின் அடிப்படையில் தவளக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான அன்பரசன் (35) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், அன்பரசன் விஜயேந்திரனுடன் நட்பாக பழகி வந்ததுடன், அவரது வீட்டிற்கும் அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட அவர், வீட்டின் சாவி மற்றும் பீரோ சாவியை எங்கு வைக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே கவனித்து, பின்னர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நகை மற்றும் பணத்தை திருடியதாக போலீஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட நகைகளில் 10 பவுன் நகைகளை உருக்கி, தனது தோழியான மாலதி என்பவர் மூலம் கடலூரில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாலதியை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலும், கடந்த மே மாதம் அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவரின் வீட்டுக்குள் புகுந்து 15 பவுன் நகைகளை அன்பரசன் திருடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், அன்பரசன் மீது ஏற்கனவே நடைபெற்ற மற்றொரு திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து, நகை மற்றும் பணத்தை மீட்ட தவளக்குப்பம் போலீஸாரை சீனியர் எஸ்.பி. கலைவாணன் பாராட்டினார். சிறப்பாக பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீஸாருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.



