கோவையில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை: செல்போன் பறிப்பு விவகாரத்தில் 5 மாணவர்களிடம் விசாரணை
கோவை அருகே ஒத்தக்கால் மண்டபத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் பறிப்பு தொடர்பான புகாரைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், செட்டிபாளையம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியைச் சேர்ந்த கென்னடியின் மகன் அமுதன் (19), ஒத்தக்கால் மண்டபத்தில் அறை எடுத்து தங்கி தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் படிக்கும் இளவரசன் (18) என்பவர் அப்பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை இளவரசன் தங்கியிருந்த அறைக்குள் முகமூடி அணிந்த சிலர் நுழைந்ததாக கூறப்படுகிறது. அங்கு இருந்த மாணவர்களை அவர்கள் தாக்கிவிட்டு, இரண்டு கைபேசிகளை பறித்துச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து இளவரசன் உள்ளிட்ட மாணவர்கள் அந்த கும்பலை விரட்டிச் சென்றனர். அப்போது ஒருவரின் முகமூடி விலகியதில், அவர் அமுதன் என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இளவரசன் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில், அதே நாள் காலை அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீமன் (19) ஆகியோர் மலுமிச்சம்பட்டி அருகே சென்றுள்ளனர். அப்போது செல்போன் பறிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிலர் காரில் வந்து, இருவரையும் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் அமுதன் படுகாயமடைந்துள்ளார். பின்னர் தனது அறைக்கு திரும்பிய அவர், அங்கு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது நண்பர் ஸ்ரீமன் அளித்த புகாரின் அடிப்படையில் செட்டிபாளையம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 5 பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பறிப்பு சம்பவம், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தாக்குதல் மற்றும் மாணவர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



