எர்ணாகுளம் தேவாலய உரிமை விவகாரத்தில் இருதரப்பினர் மோதல்: பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு
கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயம் தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கடும் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேவாலயத்துக்குள் இருதரப்பினரும் மோதிக் கொண்ட நிலையில், சிலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மக்கள் தொகையில் சுமார் 18.4 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் எனக் கூறப்படும் நிலையில், அந்த மாநிலத்தில் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சபைகளுக்கு இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் பிரமடத்தில் செயின்ட் ஜான்ஸ் பெத்லேகம் தேவாலயம் அமைந்துள்ளது.
இந்த தேவாலயத்தை ஜேக்கபைட் சிரியன் கிறிஸ்தவ சபையும், மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் சபையும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. தற்போது தேவாலயம் ஜேக்கபைட் சிரியன் கிறிஸ்தவ சபையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தேவாலயத்தில் ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் சபையைச் சேர்ந்த பாதிரியார் மற்றும் நிர்வாகிகள் திடீரென தேவாலயத்துக்குள் நுழைந்து தனியாக ஆராதனை நடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு ஜேக்கபைட் சபை நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கடுமையான மோதலாக மாறியுள்ளது.
இந்த மோதலில் இருதரப்பைச் சேர்ந்த பாதிரியார்களும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமமங்கலம் பகுதி போலீஸார் உடனடியாக தேவாலயத்துக்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் பிரித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவம் தொடர்பாக மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் சபையைச் சேர்ந்த பாதிரியார் அபின் ஆபிரகாம் உட்பட 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், ஜேக்கபைட் சிரியன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த பாதிரியார் லால்மோன் தம்பி உட்பட 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தேவாலயத்துக்குள் நடைபெற்ற மோதல் தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.



