தூத்துக்குடியில் லாக்-அப்பில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மறியல்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட அருணாச்சலம் (24) என்ற இளைஞர் இன்று (ஜூலை 23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்தார் எனக் குற்றம்சாட்டி, அவரது உடலை வாங்க மறுத்துக் குடும்பத்தினரும் உறவினர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கீதாஜீவன் தலைமையில் திமுகவினரும் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம், கடந்த ஜூலை 17-ம் தேதி 120 மதுபாட்டில்களுடன் தென்பாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல் நிலைய லாக்-அப்பில் இருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரை ஜாமீனில் விடுவித்து உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதே அவரது இறப்புக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “கைது செய்யப்பட்ட அருணாச்சலத்தைப் பரிசோதித்த மருத்துவர், அவர் உடலில் காயங்கள் எதுவுமில்லை என்றும் திடகாத்திரமாக உள்ளார் என்றும் சான்றளித்தார். லாக்-அப்பில் இருந்தபோது அவர் திடீரெனத் தானாகவே மயங்கி விழுந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் பின்னரே அவர் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தது தொடர்பாகத் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுச் சட்டப்படி விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்குத் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதையால் இளைஞர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது என்றும், இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, அருணாச்சலத்தின் மரணம் தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை நேர்மையாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.



