செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆகஸ்ட் 17 முதல் கனமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 17 முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகப் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17-ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 18-ம் தேதி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட இதர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 19-ம் தேதி நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதே நாளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பதிவு கிடைத்துள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவக்குடியில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், கோவை மாவட்டம் உபாசி, சின்கோனா, சோலையார், தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறு மற்றும் விழுப்புரம் மாவட்டம் சிறுவாடி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. வரும் நாட்களில் கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வானிலை நிலவரத்தை கவனித்து செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.



