அமெரிக்கா–தென் கொரியா கூட்டுப் பயிற்சிக்கு முன் வட கொரியா ஏவுகணை சோதனை; மீண்டும் பதற்றம்
1953-ம் ஆண்டு நடைபெற்ற கொரியப் போருக்குப் பிறகு தென் கொரியா மற்றும் வட கொரியா இடையே நேரடி துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்திருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. கடந்த 75 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் பகையின் தொடர்ச்சியாக, அமெரிக்கா–தென் கொரியா இணைந்து நடத்தும் ராணுவப் பயிற்சிக்கு முன்பாக வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளது. பொருளாதாரத் தடைகள், சர்வதேச தனிமைப்படுத்தல், ஐ.நா. கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றையும் மீறி வட கொரியா தனது ஏவுகணைத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் சூழலில், அமெரிக்காவையும் அதன் கூட்டாளியான தென் கொரியாவையும் எதிர்த்து நிற்க வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு எங்கிருந்து இந்தத் துணிச்சல் கிடைக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘தற்காப்பு’ என்ற பெயரில் இரு தரப்பினரும் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகள், அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
ஆகஸ்ட் 17 முதல் கூட்டுப் போர் பயிற்சி
அமெரிக்காவும் தென் கொரியாவும் ‘உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்டு’ என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டுப் போர்ப் பயிற்சியை ஆகஸ்ட் 17 முதல் 27-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளன. இதில் தென் கொரியா சார்பில் சுமார் 18,000 வீரர்களும், அமெரிக்கா சார்பில் 28,500 வீரர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, ஆகஸ்ட் 12-ம் தேதி காலை 6 மணியளவில் வட கொரியா தனது கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி சோதனை செய்ததாக கூறப்படுகிறது. 10 நாட்களுக்குள் வட கொரியா நடத்திய இரண்டாவது ஏவுகணைச் சோதனை இதுவாகும். இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் ஏவுகணைச் சோதனைக்கு காரணம் என்ன?
இந்த ஏவுகணைச் சோதனை தொடர்பாக வட கொரியா இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் வெளியிடவில்லை. எனினும், சர்வதேச அரசியல் பார்வையாளர்கள், அமெரிக்கா–தென் கொரியா கூட்டுப் பயிற்சிக்கு எதிரான எச்சரிக்கை நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
தங்கள் நாட்டுக்கு எதிரான எதிர்கால ராணுவ நடவடிக்கைக்கான ஒத்திகையாக அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டுப் பயிற்சியை வட கொரியா கருதுவதாகவும், அதற்கான பதிலடியாகவே ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அமெரிக்காவும் தென் கொரியாவும் தங்களது பயிற்சி பாதுகாப்பு நோக்கத்திலானது மட்டுமே என தொடர்ந்து கூறி வருகின்றன.
அமெரிக்கா–வட கொரியா இடையே நீடிக்கும் பகை
அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பகை 1950-களில் நடைபெற்ற கொரியப் போரின் காலத்திலேயே தொடங்கியது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் நேரடியாக ஈடுபட்டு வட கொரியாவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டது. அந்தப் போரின் தாக்கத்தை வட கொரியா இன்றளவும் மறக்கவில்லை.
போர் முடிவடைந்த பின்னரும் தென் கொரியாவில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருப்பதை வட கொரியா எதிர்த்து வருகிறது. ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்கா தலையிட்டதைப் போல தங்கள் நாட்டிலும் தலையிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைத் திட்டங்களை வட கொரியா வலுப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன், அந்த நாட்டை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கையின்மையே தொடர்ந்து மோதல் சூழலை உருவாக்கி வருவதாக பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப்–கிம் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பிறகு தீவிரம்
2019-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த முடிவை எட்டவில்லை. இதற்குப் பின்னர் வட கொரியா தனது ஏவுகணை மற்றும் ஆயுதத் திட்டங்களை மேலும் தீவிரப்படுத்தியதாக கூறப்படுகிறது.
வட கொரியாவின் ஒவ்வொரு ஏவுகணைச் சோதனையையும் தென் கொரியா மற்றும் ஜப்பான் தொடர்ந்து கண்டித்து வருகின்றன. இதனிடையே, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியப் படைகள் பங்கேற்பதும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா–வட கொரியா உறவு வலுப்பெற்றது
1950-களின் கொரியப் போருக்குப் பின்னர் ரஷ்யா மற்றும் வட கொரியா இடையிலான ராணுவ உறவு படிப்படியாக வலுப்பெற்றது. 2024 ஜூன் மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவை மேலும் நெருக்கமாக்கியதாக கூறப்படுகிறது.
வட கொரியா தனது ‘ஸ்டார்ம் கார்ப்ஸ்’ அமைப்பின் 11-வது படைப்பிரிவைச் சேர்ந்த சுமார் 15,000 வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியதாகவும், குர்ஸ்க் போரில் அவர்கள் பங்கேற்று உக்ரைன் படைகளுக்கு எதிராக போரிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வட கொரியாவைச் சேர்ந்த ஏராளமான ராணுவப் பொறியாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களும் ரஷ்யாவுக்கு உதவியதாக கூறப்படுகிறது.
வட கொரியா ரஷ்யாவுக்கு பீரங்கிக் குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை அதிக அளவில் வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பதிலாக ரஷ்யாவிடம் இருந்து வட கொரியாவுக்கு பணம், குறைந்த விலையில் கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள் மற்றும் ராணுவத் தொழில்நுட்ப உதவிகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவிடமிருந்து கிடைக்கும் தொழில்நுட்ப உதவி
ரஷ்யா, வட கொரியாவுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள், செயற்கைக்கோள் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவி வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஐ.நா.வில் வட கொரியாவுக்கு எதிராக புதிய தடைகள் கொண்டுவரப்படாமல் இருப்பதற்கும் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் நவீன ஆயுதங்கள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களை நடைமுறையில் சோதித்து அறியும் வாய்ப்பும் வட கொரிய ராணுவத்துக்கு கிடைத்துள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவுக்கு அதிகரிக்கும் கவலை
ரஷ்யா–வட கொரியா இடையிலான நெருக்கமான கூட்டணி காரணமாக அமெரிக்கா–தென் கொரியா கூட்டுப் போர்ப் பயிற்சிகளும் தீவிரமடைந்து வருகின்றன. அணு ஆயுதத் திட்டத்தை கைவிட வட கொரியா மறுத்து வருவதால், ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
ரஷ்யாவுக்கு ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் பீரங்கிக் குண்டுகள் தேவைப்படுகின்றன. அதே நேரத்தில் வட கொரியாவுக்கு பொருளாதார உதவி, உணவு மற்றும் மேம்பட்ட ராணுவத் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இந்த இருதரப்பு தேவைகளே ரஷ்யா–வட கொரியா இடையிலான உறவை வலுப்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி, அமெரிக்காவுக்கும் அதன் ஆசிய கூட்டாளிகளுக்கும் புதிய பாதுகாப்புச் சவாலாக உருவெடுத்து வருவதால், கொரிய தீபகற்பத்தின் பதற்றம் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.



