ரூ.58,374 கோடி வேளாண் பட்ஜெட்: ரூ.17,000 கோடி பயிர்க்கடன் முதல் மண்வளப் பாதுகாப்பு இயக்கம் வரை முக்கிய அறிவிப்புகள்
தமிழக அரசின் 2026–27 நிதியாண்டுக்கான முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், நிலையான வேளாண்மையை ஊக்குவித்தல், நீர்வள மேம்பாடு, இயற்கை விவசாயம் மற்றும் வேளாண் வணிக வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ரூ.58,374 கோடி மதிப்பிலான பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.12,713 கோடி கூடுதலாக வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சமாகும்.
சட்டப்பேரவையில் காலை 9.31 மணிக்கு பட்ஜெட் உரையை தொடங்கிய அமைச்சர் வினோத், அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நிலையான வேளாண்மை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தியை 131 லட்சம் டன்னாக உயர்த்தவும், நடப்பு ஆண்டிலேயே 125 லட்சம் டன் உற்பத்தி இலக்கை எட்டவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடி மதிப்பில் பயிர்க்கடனும், கால்நடை, மீன்வளம் மற்றும் தேனீ வளர்ப்புக்காக ரூ.3,000 கோடி மதிப்பிலான குறுகியகால கடன்களும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் ரூ.600 கோடி மதிப்பில் ஐந்தாண்டு கால ‘தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’ செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதற்காக நடப்பு ஆண்டில் ரூ.122 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பசுந்தழைகளை மடக்கி உழவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3,000 மானியம் வழங்க ரூ.63.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், திரவ உரங்கள் வழங்க ரூ.4.50 கோடி, உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.4,000 ஊக்கத்தொகையுடன் ரூ.8 கோடி, 4 லட்சம் விவசாயிகளுக்கு மண்நல அட்டைகள் வழங்க ரூ.10.16 கோடி மற்றும் நிரந்தர மண்புழு உரக்கூடங்கள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் உற்பத்தித் திறனை உயர்த்தும் வகையில் 10 லட்சம் விவசாயிகளுக்கு நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான தரமான சான்று விதைகள் வழங்க ரூ.250 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 24 ஆயிரம் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க ரூ.227 கோடி மானியம் வழங்கப்பட உள்ளது. மக்கள்ச்சோளம், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களில் முழுமையான இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் பயிற்சித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மகளிரை நவீன வேளாண்மையில் ஊக்குவிக்கும் வகையில் ‘வெற்றி வான்மகள்’ திட்டத்தின் கீழ் 500 பேருக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி வழங்க ரூ.1.50 கோடியும், பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வாங்க ரூ.2.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச ஏற்றுமதி சந்தையுடன் 1,000 விவசாயிகளை இணைக்கும் நோக்கில் ரூ.6 கோடி செலவில் நான்கு மையங்கள் அமைக்கப்பட்டு, மா, மஞ்சள், மிளகாய் உள்ளிட்ட பொருட்களுக்கு ஏற்றுமதி தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
தென்னை விவசாயிகளின் நலனுக்காக ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தென்னை நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் தனி நிதி வழங்கப்பட்டுள்ளது. நிலையான சந்தை வாய்ப்பை உருவாக்க ரூ.22.30 கோடி மதிப்பில் ‘தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம்’ அமைக்கப்பட உள்ளது. அதேபோல், 500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க மானியம் மற்றும் கடனுதவி, 50 ஆயிரம் கன்றுகளுக்கு தாது உப்புக் கலவை வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி பாதிப்புகளை சமாளிக்க மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.111 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த ‘விவசாயிகள் வருமான மேம்பாட்டு ஆணையம்’ மற்றும் வேளாண் வணிக வழிகாட்டு மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் வினோத் தெரிவித்தார். பச்சைத் துண்டு அணிந்து பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், இந்த வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் வருமானம், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நிலையான வேளாண் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று முதல் தொடங்குகிறது.



