சுதந்திர தின விழாவில் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது; பல்வேறு துறையினருக்கு விருதுகள்
சென்னை கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், இந்த ஆண்டுக்கான பல்வேறு விருதுகள் மற்றும் சிறப்பு பரிசுகளை முதல்வர் விஜய் வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான எம்.கிருஷ்ணசாமிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழுடன் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
கலாம், கல்பனா சாவ்லா விருதுகள்
சர்க்கரை நோயியல் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவர் வி.மோகனுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. அதேபோல், துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நவுஷீன் பானு சந்த்துக்கு வழங்கப்பட்டது. இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்களுக்கு முதல்வரின் நல்ஆளுமை விருதுகளும் வழங்கப்பட்டன. குழந்தைப் பருவத்தில் காணப்படும் வளர்ச்சிக் குறைபாடுகளை கண்டறிந்து, ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் தீர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீருவுக்கு விருது வழங்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மைப் பணிச் சேவைகளை செயல்படுத்தியதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பொது மேலாளர் எஸ்.சதீஷ் பிரபுவுக்கும், எடை குறைந்த செயற்கை உறுப்புகளை உருவாக்கியதற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் எம்.கீதாஞ்சலிக்கும் நல்ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விருதுகள்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ச.தினேஷ்குமாருக்கும், சிறந்த மருத்துவர் விருது சென்னையைச் சேர்ந்த ப.திருநாவுக்கரசுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த நிறுவனமாக திண்டிவனத்தைச் சேர்ந்த சிருஷ்டி பவுண்டேஷனும், சிறந்த சமூகப் பணியாளராக திருவண்ணாமலையைச் சேர்ந்த பா.மணிமாறனும் தேர்வு செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனமாக திருப்பூர் எஸ்சிஎம் கார்மென்ட்ஸுக்கும், சிறந்த கூட்டுறவு வங்கியாக மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வர் விருதுகள்
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள் பிரிவிலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலங்களுக்கான பிரிவில் 6-வது மண்டலம் (திரு.வி.க. நகர்) மற்றும் 2-வது மண்டலம் (மணலி) ஆகியவை முதல் இரண்டு பரிசுகளைப் பெற்றன.
சிறந்த மாநகராட்சிகளுக்கான பிரிவில் கோவை மற்றும் தஞ்சை மாநகராட்சிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. சிறந்த நகராட்சிகளுக்கான பிரிவில் போடிநாயக்கனூர், ஆரணி, விழுப்புரம் ஆகியவை முதல் மூன்று பரிசுகளை வென்றன. சிறந்த பேரூராட்சிகளுக்கான பிரிவில் திருவிடைமருதூர், கருங்கல், செட்டிப்பாளையம் ஆகியவை மூன்று பரிசுகளைப் பெற்றன.
மகளிர் நலன் மற்றும் இளைஞர்களுக்கான விருதுகள்
மகளிர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய சமூக சேவகருக்கான விருது ஓசூரைச் சேர்ந்த ராதாவுக்கும், மகளிர் நலனுக்காக செயல்பட்ட சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது ஈரோட்டைச் சேர்ந்த அட்சயம் டிரஸ்ட்டுக்கும் வழங்கப்பட்டது.
இளைஞர்களுக்கான முதல்வர் விருது ஆண்கள் பிரிவில் திருப்பூர் இம்மானுவேல் நெல்சன் ஏசா, தூத்துக்குடி ஏ.சரவணகுமார், சேலம் நிர்மல் கதிர்வேல் ஆகியோருக்கும், பெண்கள் பிரிவில் மயிலாடுதுறை ராஜேஸ்வரி மகாதேவன் மற்றும் மதுரை சிந்தா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. சுதந்திர தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்களித்தவர்களின் சேவையை பாராட்டும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.



