சட்டப்பேரவையில் அப்பாவை தேடுகிறார்கள் என நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது
சென்னையில் நடைபெற்ற ‘ஒரே நாடு’ மாத இதழ் மற்றும் டிஜிட்டல் பதிப்பு தொடக்க விழாவில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, “சட்டப்பேரவையில் அப்பாவை தேடுகிறார்; வீட்டில் அம்மாவிடம் கேட்டால்தான் அப்பா யார் என்று தெரியும்” என அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பங்கேற்று, ‘ஒரே நாடு’ மாத இதழ் மற்றும் அதன் டிஜிட்டல் பதிப்பை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பல்வேறு வகையான கவிதைகள் குறித்துப் பேசும்போது, தான் கல்லூரியில் படித்த காலத்தில் நினைவில் பதிந்திருந்த ஒரு கவிதையை குறிப்பிட்டார். அதன் பின்னர், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
சட்டப்பேரவையில் சிலர் “அப்பா எங்கே?” என தேடிக்கொண்டிருப்பதாகக் கூறிய நயினார் நாகேந்திரன், வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தான் அப்பா யார் என்பது தெரியவரும் என தெரிவித்தார். ஆனால், சட்டப்பேரவைக்கு வந்து அப்பாவை தேடினால் யாருக்குத் தெரியும் என்றும் அவர் பேசியது அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பிரதமர் மேற்கொண்டுள்ள சாதனைகளை ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத்தில் முடித்துவிட முடியாது என்றும், ஒரு மாதம் முழுவதும் தொடர்ந்து எடுத்துரைக்கக்கூடிய அளவுக்கு பல சாதனைகள் இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அந்த சாதனைகள் அனைத்தும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்றும் அவர் கட்சியினரிடம் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், பாஜகவுக்கு மக்கள் ஆதரவை வாக்குகளாக மாற்றுவதில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு சவால்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். தமிழக அரசியலில் மாற்றத்துக்கான சூழல் உருவாகி வருவதாகவும், இனி தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சியாக பாஜக மட்டுமே இருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் காவிரி பிரச்சினையை முன்வைத்து கருப்பு முருகானந்தம் தலைமையில் 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போராட்டத்தையும், சென்னையில் நடைபெற்ற தேசியக் கொடிப் பேரணியையும் பாஜகவின் வளர்ச்சிக்கான அடையாளங்களாக அவர் குறிப்பிட்டார். பாஜகவினர் சோர்ந்து விட்டதாக சிலர் கூறினாலும், கடந்த காலங்களில் கட்சியிலிருந்து விலகிய முக்கிய தலைவர்கள் மீண்டும் திரும்பி வந்த வரலாறு இருப்பதாகவும், அதேபோன்ற மாற்றம் தமிழகத்திலும் நிகழும் என்றும் அவர் தெரிவித்தார்.
நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த மாற்றம் தொடங்கிவிட்டதாகக் கூறிய நயினார் நாகேந்திரன், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் பாஜகவுடன் இணையும் காலம் வந்துவிட்டதாக தெரிவித்தார். சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாஜக அசைக்க முடியாத எஃகு கோட்டை என்றும், அந்தக் கட்சியை யாராலும் எளிதில் அசைக்க முடியாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, ‘வந்தே மாதரம்’ மற்றும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ ஆகியவற்றில் எது முதலில் பாடப்பட வேண்டும் என்பது தொடர்பான விவாதம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். தாய் மீது உண்மையான பற்று கொண்டவர்களால்தான் தாய்நாட்டின் மீதும் பற்றுடன் இருக்க முடியும் என்றும், அதேபோல் தாய்மொழியையும் நேசிப்பார்கள் என்றும் கூறினார். தமிழ், தாய், தாய்மொழி, தாய்நாடு மற்றும் தேசம் ஆகியவற்றை ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிரித்துப் பார்க்க முடியாது என்றும், தமிழையும் தேசியத்தையும் பாஜக ஒருபோதும் தனித்தனியாக பார்க்காது என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தவெக ஆதரவாளர் ஒருவர் சமூக வலைதளங்களில் தமிழ் கடவுள் முருகன் மற்றும் இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டு வருவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மதநல்லிணக்கம் குறித்து பேசும் விஜய், தனது கட்சி ஆதரவாளர் தொடர்பான விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முருகப்பெருமானை அவமதித்ததாக கூறப்படும் நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.



