நவோதயா பள்ளிகளைத் தடுத்தால் மாணவர்களுக்காக பாஜக வீதியில் இறங்கி போராடும்: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கு தேவையான நிலங்களை மாநில அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். மாநில உரிமை என்ற பெயரில் அரசியல் செய்யாமல், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், தமிழகத்தை தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். கிராமப்புற மாணவர்களுக்கு உயர்தர சிபிஎஸ்இ கல்வியை இலவசமாக வழங்கும் இந்தப் பள்ளிகளை தடுக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நவோதயா பள்ளிகளில் கல்வி மட்டுமின்றி மாணவர்களுக்கான தங்குமிடம், சத்தான உணவு, சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இலவசமாக வழங்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இத்தகைய பள்ளிகளைத் தடுப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, நவோதயா பள்ளிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தவெக அரசு திமுகவின் அதே மாணவர் விரோத அணுகுமுறையை பின்பற்றி வருவதாகவும், திமுகவின் ‘பி-டீம்’ போல் செயல்படுவது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
எனவே, மாநில உரிமை என்ற பெயரில் அரசியல் செய்வதை தவிர்த்து, தமிழக மாணவர்களின் நலனை முன்னிறுத்தி நவோதயா பள்ளிகளுக்குத் தேவையான நிலங்களை அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவையும் அரசு மதித்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பாதிக்கும் வகையில் அரசு தொடர்ந்து பிடிவாதமாக செயல்பட்டால், மாணவர்களின் நலனுக்காக பாஜக தொடர்ந்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் என்றும் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



