தமிழக உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும்: முதல்வருக்கு நயினார் வேண்டுகோள்
தமிழகத்தில் ரயில்வே உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தி, மத்திய அரசுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ரயில்வே திட்டங்கள் மற்றும் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தமிழக ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடும்போது, தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சுமார் 8 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், 19 புதிய ரயில்வே திட்டங்கள் மற்றும் சுமார் 500 கி.மீ. வரையிலான புதிய ரயில் பாதைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்கு மொத்தம் 4,612 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படும் நிலையில், அதில் முந்தைய திமுக அரசு 26 சதவீதம் மட்டுமே, அதாவது 1,178 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தி வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, முந்தைய ஆட்சியைப் போல மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும், புதிய ரயில்வே திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், இதற்குத் தமிழக முதல்வர் விஜய் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



