“காங். அமல்படுத்திய நீட் தேர்வுக்காக இப்போது அவர்களே போராடுகிறார்கள்” – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
சென்னை: “மத்தியில் ஆட்சியில் இருந்தபோது திமுகவும் காங்கிரஸும் கைகோத்துக் கொண்டு உருவாக்கி, அமல்படுத்திய நீட் தேர்வுக்கு எதிராக, இப்போது அதே காங்கிரஸ் கட்சி போராடுவது வேடிக்கையாக உள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்துத் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், காங்கிரஸ் ஆட்சியின் போது தான் முதன்முதலாக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளை அவர் வரிசையாகப் பட்டியலிட்டுள்ளார். 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் காங்கிரஸைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், திமுகவைச் சேர்ந்த காந்தி செல்வன் இணை அமைச்சராகவும் இருந்த போதுதான் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து, மத்திய காங்கிரஸ் ஆட்சியில் 2013 மே மாதத்தில் முதன்முறையாக நீட் தேர்வு நடத்தப்பட்டதையும், அதே ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்தபோது, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடியதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 2013 அக்டோபரில் காங்கிரஸ் அரசே மேல்முறையீடு செய்ததன் விளைவாகவே, 2016-ல் நீட் தேர்வு மீண்டும் நடைமுறைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தாங்களே உருவாக்கிய நீட் தேர்வுக்கு எதிராக இப்போது காங்கிரஸாரே போராடுவது “அவங்களே பாம் வைப்பாங்களாம், அவங்களே எடுக்கச் சொல்வாங்களாம்” என்ற நகைச்சுவையைத் தான் நினைவூட்டுகிறது என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். “தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்” என்ற குறளை மேற்கோள் காட்டிய அவர், தேவையின்றிப் பொய் பேசிச் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் மாணிக்கம் தாகூருக்கு அறிவுறுத்தியுள்ளார்.



