வெள்ள நிவாரண பணிக்கு தேவையான உதவி: அருணாச்சல், நாகாலாந்து எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி உறுதி
வெள்ள நிவாரண பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் 26 மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ள பாதிப்புகளால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 நீர்மின் நிலையங்கள், 150 சாலைகள் மற்றும் 19 பாலங்கள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன.
அதேபோல் நாகாலாந்தில் மழை, வெள்ள பாதிப்புகளால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மோன், திமாபூர், மோகாக்சங் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலை என்எச் 29-ல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்தை சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதள பதிவில், “அருணாச்சல பிரதேசம், நாகாலாந்தை சேர்ந்த எம்.பி.க்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினேன். இரு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வெள்ள நிவாரண பணிகளில் இரு மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும். அனைவரின் பாதுகாப்புக்காக பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பிரதமர் உறுதி அளித்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.



