“காவிரி பிரச்சினையில் தவெக அரசின் அர்த்தமற்ற மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை:
காவிரி டெல்டா விவசாயிகளின் உயிர்நாடிப் பிரச்சினையில் தவெக அரசு காத்து வரும் அர்த்தமற்ற மவுனம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை வழங்கக் கோரும் மனுவைக் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் மீண்டும் நிராகரித்துத் தேவையின்றி காலதாமதம் செய்து வருவதாகவும், ஏற்கனவே விவசாயிகளுக்குக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் இந்த அரசு ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் பேரபாயத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர். இத்தகைய மிக நெருக்கடியான சூழ்நிலையிலும், மாநிலத்தின் முதலமைச்சரோ அல்லது நீர்வளத் துறை அமைச்சரோ மாநில உரிமைகளுக்காகப் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசாமல் அலட்சியமாக மவுனம் சாதிப்பதாக அவர் சாடியுள்ளார்.
மேலும், கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை, அனைத்துக் கட்சிகளையும் அழைத்துச் சென்று பிரதமரிடம் நேரில் வழங்குவதற்குக் கூட முதலமைச்சருக்கு நேரம் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைத் தட்டிக் கேட்க முடியாமல் தவெக அரசு தவிப்பதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் முதலமைச்சர் தனது அர்த்தமற்ற மவுனத்தைக் கலைத்து, தமிழ்நாட்டின் மாநில உரிமையை நிலைநாட்டப் போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில், குறுவை சாகுபடி பாதிப்பாலும் சம்பா சாகுபடி நிச்சயமற்ற தன்மையினாலும் வேதனையில் இருக்கும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு உடனடியாகப் “புதிய நிவாரணத் தொகுப்பினை” அரசு அறிவிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.



