பரந்தூர் விமான நிலைய விவகாரம்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
“தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழகத்திற்குப் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா?” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதி ஆயோக் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போலத் தமிழக அரசு உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசியல் ஆதாயத்திற்காக மாநிலத்தின் வளர்ச்சியில் சமரசம் செய்யக்கூடாது என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பரந்தூர் இடம் ஏற்றதல்ல எனத் தவெக அமைச்சர் நிர்மல்குமார் கூறிய நிலையில், மாற்று இடம் கோரி தமிழக அரசு இதுவரை மத்திய அரசிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
பரந்தூருக்குப் பதிலாக இதுவரை மாற்று இடத்தை ஏன் தேர்வு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், புதிய விமான நிலையம் அமைக்கத் தவெக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



