செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி உரை: நாடு முழுவதும் 80வது சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாடு முழுவதும் சுதந்திர தினம் மிகுந்த உற்சாகத்துடனும் தேசப்பற்றுடனும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையில் நடைபெற்ற விழா சிறப்பாக நடைபெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் செங்கோட்டைக்கு வருகை தந்த அவரை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி பகுதிக்கான ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் சேத்தை பிரதமருக்கு பாதுகாப்புத் துறை செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்புப் படைகள் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் தேசியக் கொடி ஏற்றும் பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அந்த நேரத்தில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று தேசியப் பாடலுக்கு மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்வில் பிரதமருக்கு கேப்டன் சோனியா சிங் சவுகான் உதவினார். கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதே நேரத்தில் விமானப்படை சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மலர் இதழ்கள் தூவப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும், சிவில் மற்றும் ராணுவ உயரதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் விழாவில் கலந்து கொண்டு சுதந்திர தின நிகழ்வை சிறப்பித்தனர்.



